Feeds:
Posts
Comments

Archive for the ‘Uncategorized’ Category

அந்த நிறுவனத்தின் லட்சபோ லட்ச ஊழியர்களில் அவளும் ஒருத்தி…மும்மாத லாப கணக்கில் ஒரு சில லட்சங்களாவது அவள் உழைப்பின் மூலம் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும்…

எப்போதும் போல காலையில் கணவன்,மகனுக்கு அன்பு முத்தங்கள் கொடுத்து விடை பெற்று அலுவலகம் சென்றாள். ஏதோ முக்கியமான அவசர கூட்டத்திற்கு தயார் செய்து கணவனை அழைத்து பேசி விரைவாக ஒரு வித மன அழுத்ததுடன் சென்று கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில் மயங்கி விழுந்து மரித்திருக்கிறாள்… ஏன்….? எதற்கு…?? விடை தெரியாத பல கேள்விகளுடன் குடும்பமும் நண்பர்களும் குழம்பிய நிலையில்….

4 வயதே நிரம்பிய மகன், மாலை நேரமாகியும் தாய் வீடு திரும்பவில்லையென அப்பாவையும் வீட்டில் சட்டென கூடியுள்ளவரையும் திரும்ப திரும்ப கேட்கையில் ”அம்மாவிற்கு உடம்பிற்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்” என பொய் உரைக்கப்பட, “ நான் இப்போதே சாமியிடம் பிரார்த்திக்கிறேன்” என ஓடிச்சென்று ஊதுவர்த்தியை கொளுத்தி சாமிகளிடம் வேண்டி நின்றவன், கதவு திறக்கும் ஓசை கேட்டு அம்மாதான் வந்திருக்கிறாள் என ஓடி வந்து பார்க்கையில் அந்த கள்ளமில்லா முகத்தை நோக்கி இனி உன் அம்மா திரும்ப வரவே இயலாத இடத்திற்கு போய் விட்டாள் என உண்மையை யாரால் உரைக்க முடியும்? எப்படி அந்த குழந்தை அதை புரிந்து கொள்ளும்? அவன் பிரார்த்தனை பொய்த்து விட்டது என்பதை எப்படி அவனால் ஜீரணிக்க முடியும்?

அவள் வயிற்றில் வளர்ந்த, மலர்ந்தும் மலராத மகனோ/மகளோ இப்பூமியை தரிசிக்காமலேயே போய் விட்ட துக்கம்தான் எத்துணை கொடியது? யாரால் ஈடு செய்ய முடியும் இந்த இழப்பை? அவள் பணிபுரிந்த நிறுவனமோ வாடிக்கையாளரோ எத்தனை நிமிடங்கள் கவலைப்பட்டிருப்பார்கள்? கண்ணீர் சிந்தியிருப்பார்கள்? தலைகளை மட்டுமே “எண்ணி” டாலர்/ரூபாய் நோட்டுகளை அதற்கிணையாக “எண்ணி” வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு இவளைப் பற்றி “எண்ண” என்ன இருக்கும்? வாடிக்கையாளருக்கு காலம் தவறாமல் தாழ்த்தாமல் கொடுத்த வேலையை எப்படி யார் தலையை/இதயத்தை வெடிக்க வைத்து முடித்து கொடுக்கலாம் என “எண்ணி” செயல்படத்தானே நேரமிருக்கும்…. இவர்களுக்காக இவர்களின் வேலைக்காகத்தானே உன்னுயிரை கொடுத்தாய் சகோதரி….?

உடன் பணிபுரிந்தோருக்கு இது ஒரு நாள் அல்லது ஒரு வார துக்கம். வேலை அவசரத்தில் நீ அவர்களுக்கு ஒரு பெயராக நம்பராக அடையாள அட்டையாக கூட நினைவில் இருக்க மாட்டாய். என்றேனும் facebookல் அஞ்சலி post செய்து like பெறுவதோடு முடிந்துவிடும் அவர்களின் உறவு. ஆனால் இது எத்துணை பெரிய துக்கம் அம்மாவிற்கு,அப்பாவிற்கு,கணவனுக்கு,தங்கைக்கு, விவரம் புரிய ஆரம்பிக்கையில் அன்பு மகனுக்கு…..யாராலும் நிரப்பகூடிய இடமா உன்னுடையது? பணம், நகை,stocks,bondsகளால் வாங்கி கொடுக்க முடியுமா உன்னை?

மரணம் இயல்பானதுதான், நிரந்தரமானதுதான், சொல்லாமல் வந்து கூட்டிச் செல்லும் உடன் பிறந்தவன்(ள்) தான். ஆனால் வாழ்வை இன்னும் அனுபவித்து வாழ்ந்து முடிக்காத ஆன்மாக்கள் சட்டென நம்மை பிரிகையில்தான் வாழ்க்கையின் அர்த்தம் இன்னும் ஆழமாக தெளிவாக புலப்படுகிறது. இந்த உலகில் இனி இருக்கப்போகும் இன்னும் சில வினாடிகள் நிமிடங்கள் மணித்துளிகள் நாட்கள் வாரங்கள் மாதங்கள் வருடங்கள் எத்தனை மதிக்க தக்கவை அதை எப்படி விரயமாக்காமல் சக மனிதர்களை துரோகிக்காமல் துன்பப்படுத்தாமல் முடிந்தவரை மகிழ்ச்சியாக பயனுள்ளதாக கடத்த வேண்டுமென நடுமண்டையில் நச்சென அடித்து சொல்கிறது.

“கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்” என்பது எத்துணை சத்தியமான வார்த்தைகள். எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்திருந்தும் நிலைகொள்ளாமல் ஆடும் மனிதர்களை கண்டு தெரிந்து விலகி என்றும் மகிழ்ச்சியாய் இருக்க வைக்கும் வழிகளை மட்டும் அறிந்து வாழ்வை அனுபவித்திருக்க ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை/வேண்டுகோள்/அறிவுரை கொடுத்து கொண்டுதான் செல்கிறது. அதை நன்கு கேட்டு அறிந்து நடந்தால் நமக்கும் நம்மை நேசிப்பவர்களுக்கும் நலம்.

என் அன்பு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். உடல் நலத்துடனும் மன நலத்துடனும் அவரின் குடும்பம் வாழ வாழ்த்துகிறேன். அன்பு மட்டும் எங்கும் தழைத்தோங்க விழைகிறேன்.

இன்றைய நாளில் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் உற்று நோக்கி சீர்தூக்க சந்தர்ப்பத்தை தந்த சகோதரிக்கு நன்றிகள்! உன் நினைவுகள் என்றும் அழியாது….

Advertisements

Read Full Post »

படம்இதுவரை வாழ்நாளில் FDFS எந்த திரைப்படத்தையும் பார்த்ததில்லை ( நம்புங்க மக்க 🙂 ), “விஸ்வரூபம்” தமிழகத்தில் தடை செய்யப்பட்டதை அறிந்ததும், என்ன தான் அப்படி சொல்லியிருக்கிறார் காட்சிப் படுத்தி இருக்கிறார் என பேராவல் மிகுந்து இன்று (1/24) மாலை பார்த்தேயாகிவிட்டது…… 🙂 சுடச்சுட சில எண்ணங்கள்… 

* சர்வ நிச்சயமாக இது ஹாசனின் “விஸ்வரூபம்”, ஒவ்வொரு சட்டகத்திலும் வழிந்த கலைத்திறமையை கண்டு விழி கொள்ளாமல் மலைத்து அமர்ந்திருந்தேன் முடியும் வரை…. ஹேராம், தசாவதாரம் எல்லாவற்றையும் வாமனனைப் போல தாண்டி உலகை அளந்து (நிச்சயமாக உலக நாயக நிலையையும் அடைந்து) விட்டார். அடுத்து வர இருக்கும் ஆங்கில படத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டார்.

* மெய்ப்பொருள் காணும் அறிவுடையோர் இந்த படம் தீவிரவாதத்தை தூண்டாது – வெறுக்க வைக்கும், மதங்களை தாண்டி மனிதத்தை வளர்க்க விரும்ப வைக்கும் என நிச்சயமாக நம்புவர். நம்பிக்கைத்தானே வாழ்க்கை!. அனுமன் சினம் மிகுந்த கண்களோடு இலங்கையை பார்த்துவிட்டு ஒரே சிவப்பாக இருக்கிற நாடு என கதைத்தா”ராம்”. விழியை மட்டுமல்ல மனசையும் தெளிவாக்கி பார்த்தால் உண்மை விளங்கும். 

* தயவு செய்து குழந்தைகளை திரையரங்கிற்கு கொண்டு செல்லாதீர்கள், அவர்கள் வளர்ந்து பின் கண்டு உணர்ந்து பாரட்ட பட வேண்டிய படம், இப்போதல்ல..அதீத குருதி வழியும் சண்டை காட்சிகள் அவர்களையும் உங்களையும் சங்கடப் படுத்தும் (வீட்டிலிருந்து என் குழந்தைகளை பார்த்து கொண்ட மனைவிக்கு அன்பு நன்றி 🙂 ). கண்டு கொண்டிருக்கையில் என் தாடையிலும் சில அடிகள் விழுந்து குருதி தெறித்ததா என ஒரு மயக்கம், அருமையான ஒலிப்பதிவு.

* அவர் படங்களில் சமீப காலமாக தொடர்ந்து வரும் க்ளிஷேவான கணவன் மனைவி உறவு சிக்கல்கள் நிறைந்த காட்சிகள், வசனங்கள் தவிர்த்து பார்த்தால் ஒரு “நறுக்”கான திரைக்கதை, இயல்பான நேர்த்தியான அழகான ஒளிப்பதிவு, கலை இயக்கமும் சண்டை பயிற்சியும் “அடி தூள்”, மிக மிக கச்சிதமான இயக்கம், கேமரா கவிஞன் சொன்னது போல் – “உலக இயக்குனர்” வரிசையில் “நம்மவர்”!

* உங்களுக்கு கமலை பிடிக்காவிட்டாலும் இந்த படத்தை பிடிக்கும். அகண்ட திரையில் அருமையான ஒலியமைப்புடன் காணுங்கள், பிரம்மியுங்கள் !!

p.s: கதையை, வசனங்களை, காட்சியமைப்புகளைப் பற்றி விரிவாக இன்னும் நிறைய விவாதிக்கலாம்….யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், அதன் பின்…. 🙂

Read Full Post »