Feeds:
Posts
Comments

Archive for the ‘சும்மா’ Category

அவன் சிரித்தான். அவளும் புன்னகைத்தாள். விரைவில் காதலரானார்கள். ஒரு பொழுது கண்டிடின் கண்ணிமை படபடக்க ஜன்னலில் அவள். மொட்டை மாடிகளில் செவிட்டூமை மொழி பரிமாற்றம். ஊரார் ஊமை செவிடு என்ற நினைப்புடன் நினைவுகளின் தபால்கள்.

எத்தனை முறை அளந்தாலும் தீராத கடற்கரை மணல்கள். மடிமேல் உறக்கம். மனத்துள் கிறக்கம். கொஞ்சல்களுடன் தாலாட்டு. கெஞ்சல்களுடன் சீராட்டு. எத்தனை முறை தரிசித்தாலும் அலுக்காத முகங்கள். எத்தனை காலம் வரையோ…?. எதை எதையோ பேசும் அவர்கள், அவர்களை மறப்பர்.உணவு இறங்காது உணர்வும் உறங்காது. 

பணம் கரைய மனம் கரைபவர்களும் இங்கு உண்டு சிலர். தூண்டில்காரர்கள் சிலர். வணிகர்கள் சிலர். பசி கொண்டு வலையிட்டு புசிப்பவர் சிலர். உணர்வில் கலந்து உடல் வருத்த ஊழி அழியும் வரை உடனிருந்து உடன்கட்டை ஏறுபவர் சிலர்.

இருந்தும் இப்பொழுது விலை பேசப்படுகிறது. இவளைப் பிடித்தால் என்ன லாபம் ? இவளுள் என்னதான் நன்ன என கூறு போடப்படுகிறது. காதலர்களில் கசாப்பு வாசனை நீறி மிக்க நாளாகிவிட்டது. எதையாவது செய்ய வேண்டும் எனத் துடிக்கும் இளைஞர்களுக்கு தற்போது கிடைத்திருப்பது பிடித்திருப்பது – காதல் காதலோ காதல்!.

“உன்னால் என்னை காதல் செய்ய முடியுமா?” (அல்லது) ” நான் உன்னை காதல் செய்கிறேன்” – இளைஞர்களின் திருவாசகமிது. விளம்பரங்கள் கூட கொடுக்கலாம். வியாபாரம் அழகாகவே களை கட்டி விட்டது. “உங்கள் படம் ஓட வேண்டுமா ? வையுங்கள் இரண்டொரு காதல் ஜோடிகளை!  புரளவிடுங்கள் ! மழையில் ஓடவிடுங்கள்! முகங்களை முகரச் சொல்லுங்கள்! காதலியை மழையில் தொப்புள் காட்டச் சொல்லுங்கள்! முக்கியமாக அப்போழுது வெள்ளுடை இருக்கட்டும், கதையில்லாவிட்டால் கூட நல்ல சதையிருந்தால் போதும் உங்கள் படம் வெள்ளிவிழா காணும்!.

குறிக்கோளின்றி ஜன்னலோரம் அமர்ந்து நிதம் காலையில் நடைப்பயிலும் கல்லூரிப் பெண்ணுக்கு அம்பு விடுங்கள். நீங்கள் காதலர் ஆகாவிடினும் கவிஞராகவே ஆகலாம். 

காதலைப் பாடாத கவிஞனேயில்லை. அந்தளவு காதலில் வியாபார பசையுள்ளது. அவசரமாகச் சிற்றூண்டிக்கு பணம் வேண்டுமா ? எழுது காதலைப் பற்றி நாலு கவிதை!

எத்தனை முறை நீங்கள் மலர்களைப் பார்க்கிறீர்கள்? எத்தனை பேர் மலர்களை வைத்து காதலை வர்ணித்துள்ளார்கள்? இதோ! நான் மலர்கள் மூலம் காதலைக் கண்டிக்கிறேன். பூக்கின்றனவையில் மகரந்தங்களற்று தேனிழந்து உதிர்ந்து மண்ணில் சேறாகி மரணமடைகின்றன சில. தேனூறிய மகரந்தங்கள் ததும்பிய சில திருக்கோயிலுக்கும் போகின்றன. அமரராகிய மலர்களை யாரும் நினைப்பாரில்லை. “தெய்வப்பிரசாதம்” விருதுப்பெற்ற மலர்கள்தான் மனிதர்களால் மதிக்கப்படுகின்றன. காதலித்து புத்தி பேதலித்துச் சிற்சில இன்பங்களில் சுகம் காண முற்பட்டு புனித பந்தத்தை புண்ணாக்காய் நினையும் மாந்தார்கள் என்னைப் பொறுத்தவரை அமரராகிப் போன மலர்களே!

நீங்கள் இதிகாசங்களையும் கதைகளையும் உதாரணம் காட்டுவதை இனியாவது நிறுத்துங்கள்!. இலக்கிய காதல் வேறு, இன்றையக் காதல் வேறு!. சிவந்து கொழுத்திருந்தால் பணபலமிருந்தால் உங்களைக்கூட இன்று ஆயிரம் பேர் காதலிப்பர். திரையில் உலாவும் ஆணழகர்களை ஆராதித்து அமரராகும் யுவன் யுவதிகளின் கதைகள் நாம் அறிவதே.

காதலின் சின்னம் தாஜ்மகால்தான் ஒப்புக்கொள்கிறேன். மரணத்திற்குப்பின்னும் மனைவியை நேசித்த ஒருவனின் அன்பின் அடையாளமது. நான் அதை மதிக்கிறேன்.  ஆனால், இன்றைய யுவ உலகிற்கு தாஜ்மகால் தேவையில்லை. தியேட்டர் இருட்டும் படகு மறைவும் போதும்.

ஏ யுவனே! யுவதியே! காதலுக்கு “தடா” சொல்! உன்னையும் உன் குறிக்கோள்களையும் செல்லரிக்கும் அந்த உடம்பு பசி உனக்கு வேண்டாம். வேண்டாவே வேண்டாம்!. வெளியே வா அந்த புதைக்குழியிலிருந்து. உனக்கு உன் துணையைத் தேறும் பருவம் வரவில்லை. உன்னைக் காதலிக்க வேண்டாம் என்றுச் சொல்லவில்லை.

காதல் செய், உன் மனைவியிடம்!. காதல் செய், உன் அன்புக்குரியவர்களிடம்!. உன்னையே நீ காதல் செய்!. உன் தொழில் மேல் காதல் செய்!

உன்னைத் தேடி ஒருநாள் உனக்கெனவே ஒருவள் வருவாள்! அதுவரை காதலுக்கு “தடா” சொல்!

கல்லூரி மலருக்காக எழுதிய ஆண்டு: 1996. 

Advertisements

Read Full Post »