Feeds:
Posts
Comments

அந்த நிறுவனத்தின் லட்சபோ லட்ச ஊழியர்களில் அவளும் ஒருத்தி…மும்மாத லாப கணக்கில் ஒரு சில லட்சங்களாவது அவள் உழைப்பின் மூலம் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும்…

எப்போதும் போல காலையில் கணவன்,மகனுக்கு அன்பு முத்தங்கள் கொடுத்து விடை பெற்று அலுவலகம் சென்றாள். ஏதோ முக்கியமான அவசர கூட்டத்திற்கு தயார் செய்து கணவனை அழைத்து பேசி விரைவாக ஒரு வித மன அழுத்ததுடன் சென்று கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கையில் மயங்கி விழுந்து மரித்திருக்கிறாள்… ஏன்….? எதற்கு…?? விடை தெரியாத பல கேள்விகளுடன் குடும்பமும் நண்பர்களும் குழம்பிய நிலையில்….

4 வயதே நிரம்பிய மகன், மாலை நேரமாகியும் தாய் வீடு திரும்பவில்லையென அப்பாவையும் வீட்டில் சட்டென கூடியுள்ளவரையும் திரும்ப திரும்ப கேட்கையில் ”அம்மாவிற்கு உடம்பிற்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்” என பொய் உரைக்கப்பட, “ நான் இப்போதே சாமியிடம் பிரார்த்திக்கிறேன்” என ஓடிச்சென்று ஊதுவர்த்தியை கொளுத்தி சாமிகளிடம் வேண்டி நின்றவன், கதவு திறக்கும் ஓசை கேட்டு அம்மாதான் வந்திருக்கிறாள் என ஓடி வந்து பார்க்கையில் அந்த கள்ளமில்லா முகத்தை நோக்கி இனி உன் அம்மா திரும்ப வரவே இயலாத இடத்திற்கு போய் விட்டாள் என உண்மையை யாரால் உரைக்க முடியும்? எப்படி அந்த குழந்தை அதை புரிந்து கொள்ளும்? அவன் பிரார்த்தனை பொய்த்து விட்டது என்பதை எப்படி அவனால் ஜீரணிக்க முடியும்?

அவள் வயிற்றில் வளர்ந்த, மலர்ந்தும் மலராத மகனோ/மகளோ இப்பூமியை தரிசிக்காமலேயே போய் விட்ட துக்கம்தான் எத்துணை கொடியது? யாரால் ஈடு செய்ய முடியும் இந்த இழப்பை? அவள் பணிபுரிந்த நிறுவனமோ வாடிக்கையாளரோ எத்தனை நிமிடங்கள் கவலைப்பட்டிருப்பார்கள்? கண்ணீர் சிந்தியிருப்பார்கள்? தலைகளை மட்டுமே “எண்ணி” டாலர்/ரூபாய் நோட்டுகளை அதற்கிணையாக “எண்ணி” வாங்கி பழக்கப்பட்டவர்களுக்கு இவளைப் பற்றி “எண்ண” என்ன இருக்கும்? வாடிக்கையாளருக்கு காலம் தவறாமல் தாழ்த்தாமல் கொடுத்த வேலையை எப்படி யார் தலையை/இதயத்தை வெடிக்க வைத்து முடித்து கொடுக்கலாம் என “எண்ணி” செயல்படத்தானே நேரமிருக்கும்…. இவர்களுக்காக இவர்களின் வேலைக்காகத்தானே உன்னுயிரை கொடுத்தாய் சகோதரி….?

உடன் பணிபுரிந்தோருக்கு இது ஒரு நாள் அல்லது ஒரு வார துக்கம். வேலை அவசரத்தில் நீ அவர்களுக்கு ஒரு பெயராக நம்பராக அடையாள அட்டையாக கூட நினைவில் இருக்க மாட்டாய். என்றேனும் facebookல் அஞ்சலி post செய்து like பெறுவதோடு முடிந்துவிடும் அவர்களின் உறவு. ஆனால் இது எத்துணை பெரிய துக்கம் அம்மாவிற்கு,அப்பாவிற்கு,கணவனுக்கு,தங்கைக்கு, விவரம் புரிய ஆரம்பிக்கையில் அன்பு மகனுக்கு…..யாராலும் நிரப்பகூடிய இடமா உன்னுடையது? பணம், நகை,stocks,bondsகளால் வாங்கி கொடுக்க முடியுமா உன்னை?

மரணம் இயல்பானதுதான், நிரந்தரமானதுதான், சொல்லாமல் வந்து கூட்டிச் செல்லும் உடன் பிறந்தவன்(ள்) தான். ஆனால் வாழ்வை இன்னும் அனுபவித்து வாழ்ந்து முடிக்காத ஆன்மாக்கள் சட்டென நம்மை பிரிகையில்தான் வாழ்க்கையின் அர்த்தம் இன்னும் ஆழமாக தெளிவாக புலப்படுகிறது. இந்த உலகில் இனி இருக்கப்போகும் இன்னும் சில வினாடிகள் நிமிடங்கள் மணித்துளிகள் நாட்கள் வாரங்கள் மாதங்கள் வருடங்கள் எத்தனை மதிக்க தக்கவை அதை எப்படி விரயமாக்காமல் சக மனிதர்களை துரோகிக்காமல் துன்பப்படுத்தாமல் முடிந்தவரை மகிழ்ச்சியாக பயனுள்ளதாக கடத்த வேண்டுமென நடுமண்டையில் நச்சென அடித்து சொல்கிறது.

“கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்” என்பது எத்துணை சத்தியமான வார்த்தைகள். எதுவும் நிரந்தரமில்லை என தெரிந்திருந்தும் நிலைகொள்ளாமல் ஆடும் மனிதர்களை கண்டு தெரிந்து விலகி என்றும் மகிழ்ச்சியாய் இருக்க வைக்கும் வழிகளை மட்டும் அறிந்து வாழ்வை அனுபவித்திருக்க ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை/வேண்டுகோள்/அறிவுரை கொடுத்து கொண்டுதான் செல்கிறது. அதை நன்கு கேட்டு அறிந்து நடந்தால் நமக்கும் நம்மை நேசிப்பவர்களுக்கும் நலம்.

என் அன்பு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். உடல் நலத்துடனும் மன நலத்துடனும் அவரின் குடும்பம் வாழ வாழ்த்துகிறேன். அன்பு மட்டும் எங்கும் தழைத்தோங்க விழைகிறேன்.

இன்றைய நாளில் வாழ்க்கையை இன்னும் கொஞ்சம் உற்று நோக்கி சீர்தூக்க சந்தர்ப்பத்தை தந்த சகோதரிக்கு நன்றிகள்! உன் நினைவுகள் என்றும் அழியாது….

Advertisements

படம்இதுவரை வாழ்நாளில் FDFS எந்த திரைப்படத்தையும் பார்த்ததில்லை ( நம்புங்க மக்க 🙂 ), “விஸ்வரூபம்” தமிழகத்தில் தடை செய்யப்பட்டதை அறிந்ததும், என்ன தான் அப்படி சொல்லியிருக்கிறார் காட்சிப் படுத்தி இருக்கிறார் என பேராவல் மிகுந்து இன்று (1/24) மாலை பார்த்தேயாகிவிட்டது…… 🙂 சுடச்சுட சில எண்ணங்கள்… 

* சர்வ நிச்சயமாக இது ஹாசனின் “விஸ்வரூபம்”, ஒவ்வொரு சட்டகத்திலும் வழிந்த கலைத்திறமையை கண்டு விழி கொள்ளாமல் மலைத்து அமர்ந்திருந்தேன் முடியும் வரை…. ஹேராம், தசாவதாரம் எல்லாவற்றையும் வாமனனைப் போல தாண்டி உலகை அளந்து (நிச்சயமாக உலக நாயக நிலையையும் அடைந்து) விட்டார். அடுத்து வர இருக்கும் ஆங்கில படத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டார்.

* மெய்ப்பொருள் காணும் அறிவுடையோர் இந்த படம் தீவிரவாதத்தை தூண்டாது – வெறுக்க வைக்கும், மதங்களை தாண்டி மனிதத்தை வளர்க்க விரும்ப வைக்கும் என நிச்சயமாக நம்புவர். நம்பிக்கைத்தானே வாழ்க்கை!. அனுமன் சினம் மிகுந்த கண்களோடு இலங்கையை பார்த்துவிட்டு ஒரே சிவப்பாக இருக்கிற நாடு என கதைத்தா”ராம்”. விழியை மட்டுமல்ல மனசையும் தெளிவாக்கி பார்த்தால் உண்மை விளங்கும். 

* தயவு செய்து குழந்தைகளை திரையரங்கிற்கு கொண்டு செல்லாதீர்கள், அவர்கள் வளர்ந்து பின் கண்டு உணர்ந்து பாரட்ட பட வேண்டிய படம், இப்போதல்ல..அதீத குருதி வழியும் சண்டை காட்சிகள் அவர்களையும் உங்களையும் சங்கடப் படுத்தும் (வீட்டிலிருந்து என் குழந்தைகளை பார்த்து கொண்ட மனைவிக்கு அன்பு நன்றி 🙂 ). கண்டு கொண்டிருக்கையில் என் தாடையிலும் சில அடிகள் விழுந்து குருதி தெறித்ததா என ஒரு மயக்கம், அருமையான ஒலிப்பதிவு.

* அவர் படங்களில் சமீப காலமாக தொடர்ந்து வரும் க்ளிஷேவான கணவன் மனைவி உறவு சிக்கல்கள் நிறைந்த காட்சிகள், வசனங்கள் தவிர்த்து பார்த்தால் ஒரு “நறுக்”கான திரைக்கதை, இயல்பான நேர்த்தியான அழகான ஒளிப்பதிவு, கலை இயக்கமும் சண்டை பயிற்சியும் “அடி தூள்”, மிக மிக கச்சிதமான இயக்கம், கேமரா கவிஞன் சொன்னது போல் – “உலக இயக்குனர்” வரிசையில் “நம்மவர்”!

* உங்களுக்கு கமலை பிடிக்காவிட்டாலும் இந்த படத்தை பிடிக்கும். அகண்ட திரையில் அருமையான ஒலியமைப்புடன் காணுங்கள், பிரம்மியுங்கள் !!

p.s: கதையை, வசனங்களை, காட்சியமைப்புகளைப் பற்றி விரிவாக இன்னும் நிறைய விவாதிக்கலாம்….யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம், அதன் பின்…. 🙂

எந்தாய்க்கு கசந்தது
இனித்தது எனக்கு.

எனக்கு கசந்தது
என் மகளுக்கு இனிக்கிறது.

பசிகள் மாறுகையில்
ருசிகளும் மாறும்.

——————————–

சின்னதாய் ஒரு குடில்.
அருகே ஒரு தென்னை.
கிளையில் தனியாய் நீலக்குயில்.
தூரமாய் ஒற்றை நிலா.
கால் நனைக்க அலையலையாய் கடல்.
கரடி பொம்மையுடன்
கரையில் நான்.

நான் வரைந்த ஒவியத்தைக் காண
இன்றேக்கேனும் சீக்கிரம் வருவாயா அப்பா?

——————————–

பேராசைதான்.

அருமையான அணிதான், இந்த உலக கோப்பையை வெல்லக்கூடிய தகுதிகளும் வீரர்களும் நிரம்பிய அணிதான். ஆனாலும் அவர்களின் தற்போதைய எந்த ஒரு விளையாட்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆடும் விளையாட்டில் வரும் பரப்பரப்போ, தென் ஆப்பிரிக்கா-ஆஸி Semi final Tie match/தென் ஆப்பிரிக்கா-இலங்கையின் Super 8 match போல சுவாரசியமாகவோ  இல்லை. One – Sided ஆக இருந்து என்னைப் போன்ற சராசரி கிரிக்கெட் ரசிகனை வெறுப்பேற்றுகிறது. [ நம் அணி வெறுப்பேற்றியது பற்றி பேசிப் பயனில்லை].

இறுதிப்போட்டியில் அவர்கள் வென்றாலும் ஆச்சரியம் எதுவுமில்லை. தற்போதைய நிலவரப்படி எந்த அணியும் அவர்களை கிட்ட நெருங்க இயலா வண்ணம் அனைத்து வீரர்களும் அனைத்து துறைகளிலும் மின்னுகிறார்கள்.

ஆனாலும்….ஒரு சின்ன ஆசை.

Semi-Finalல் இலங்கை வென்று [ வெல்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் ] Finalலில் ஆஸியை மோத வேண்டும். விட்டு கொடுக்காத அவர்களின் fighting spirit உடன் முரளி/மலிங்காவின் Magic மூலம் மீண்டும் பரப்பரப்பான சுவாரசியமான ஆட்டத்துடன் ஆஸியை வீழ்த்த வேண்டும். இதுவரை எந்த போட்டியிலும் (இந்த உலக கோப்பையில்) தோற்காத ஆஸி finalலில் தோற்க வேண்டும்.

கடந்த உலக கோப்பையின் final ஆட்டத்தை போல One sided ஆகாமலிருந்தால நான்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த கொண்டாடத்திற்கு ஒரு உயிர்ப்பு இருக்கும். அவ்வளவே!

ஆஸிக்கும் இலங்கைக்கும் Advance wishes!

 பி.கு 1: ஏன் NZ finalலுக்கு வரக்கூடாதா என நீங்கள் கேட்கலாம். ஆனாலும் NZயை விட இலங்கை நல்ல ஒரு fight back match தரும் என நம்புகிறேன்.

பி.கு 2: கிரிக்கெட் உலகின் “Run machine” எனப் பெயர் பெற்று இன்று “Run out” ஆகி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் Brian Lara விற்கு வாழ்த்துக்களும் நன்றியும்!

அவன் சிரித்தான். அவளும் புன்னகைத்தாள். விரைவில் காதலரானார்கள். ஒரு பொழுது கண்டிடின் கண்ணிமை படபடக்க ஜன்னலில் அவள். மொட்டை மாடிகளில் செவிட்டூமை மொழி பரிமாற்றம். ஊரார் ஊமை செவிடு என்ற நினைப்புடன் நினைவுகளின் தபால்கள்.

எத்தனை முறை அளந்தாலும் தீராத கடற்கரை மணல்கள். மடிமேல் உறக்கம். மனத்துள் கிறக்கம். கொஞ்சல்களுடன் தாலாட்டு. கெஞ்சல்களுடன் சீராட்டு. எத்தனை முறை தரிசித்தாலும் அலுக்காத முகங்கள். எத்தனை காலம் வரையோ…?. எதை எதையோ பேசும் அவர்கள், அவர்களை மறப்பர்.உணவு இறங்காது உணர்வும் உறங்காது. 

பணம் கரைய மனம் கரைபவர்களும் இங்கு உண்டு சிலர். தூண்டில்காரர்கள் சிலர். வணிகர்கள் சிலர். பசி கொண்டு வலையிட்டு புசிப்பவர் சிலர். உணர்வில் கலந்து உடல் வருத்த ஊழி அழியும் வரை உடனிருந்து உடன்கட்டை ஏறுபவர் சிலர்.

இருந்தும் இப்பொழுது விலை பேசப்படுகிறது. இவளைப் பிடித்தால் என்ன லாபம் ? இவளுள் என்னதான் நன்ன என கூறு போடப்படுகிறது. காதலர்களில் கசாப்பு வாசனை நீறி மிக்க நாளாகிவிட்டது. எதையாவது செய்ய வேண்டும் எனத் துடிக்கும் இளைஞர்களுக்கு தற்போது கிடைத்திருப்பது பிடித்திருப்பது – காதல் காதலோ காதல்!.

“உன்னால் என்னை காதல் செய்ய முடியுமா?” (அல்லது) ” நான் உன்னை காதல் செய்கிறேன்” – இளைஞர்களின் திருவாசகமிது. விளம்பரங்கள் கூட கொடுக்கலாம். வியாபாரம் அழகாகவே களை கட்டி விட்டது. “உங்கள் படம் ஓட வேண்டுமா ? வையுங்கள் இரண்டொரு காதல் ஜோடிகளை!  புரளவிடுங்கள் ! மழையில் ஓடவிடுங்கள்! முகங்களை முகரச் சொல்லுங்கள்! காதலியை மழையில் தொப்புள் காட்டச் சொல்லுங்கள்! முக்கியமாக அப்போழுது வெள்ளுடை இருக்கட்டும், கதையில்லாவிட்டால் கூட நல்ல சதையிருந்தால் போதும் உங்கள் படம் வெள்ளிவிழா காணும்!.

குறிக்கோளின்றி ஜன்னலோரம் அமர்ந்து நிதம் காலையில் நடைப்பயிலும் கல்லூரிப் பெண்ணுக்கு அம்பு விடுங்கள். நீங்கள் காதலர் ஆகாவிடினும் கவிஞராகவே ஆகலாம். 

காதலைப் பாடாத கவிஞனேயில்லை. அந்தளவு காதலில் வியாபார பசையுள்ளது. அவசரமாகச் சிற்றூண்டிக்கு பணம் வேண்டுமா ? எழுது காதலைப் பற்றி நாலு கவிதை!

எத்தனை முறை நீங்கள் மலர்களைப் பார்க்கிறீர்கள்? எத்தனை பேர் மலர்களை வைத்து காதலை வர்ணித்துள்ளார்கள்? இதோ! நான் மலர்கள் மூலம் காதலைக் கண்டிக்கிறேன். பூக்கின்றனவையில் மகரந்தங்களற்று தேனிழந்து உதிர்ந்து மண்ணில் சேறாகி மரணமடைகின்றன சில. தேனூறிய மகரந்தங்கள் ததும்பிய சில திருக்கோயிலுக்கும் போகின்றன. அமரராகிய மலர்களை யாரும் நினைப்பாரில்லை. “தெய்வப்பிரசாதம்” விருதுப்பெற்ற மலர்கள்தான் மனிதர்களால் மதிக்கப்படுகின்றன. காதலித்து புத்தி பேதலித்துச் சிற்சில இன்பங்களில் சுகம் காண முற்பட்டு புனித பந்தத்தை புண்ணாக்காய் நினையும் மாந்தார்கள் என்னைப் பொறுத்தவரை அமரராகிப் போன மலர்களே!

நீங்கள் இதிகாசங்களையும் கதைகளையும் உதாரணம் காட்டுவதை இனியாவது நிறுத்துங்கள்!. இலக்கிய காதல் வேறு, இன்றையக் காதல் வேறு!. சிவந்து கொழுத்திருந்தால் பணபலமிருந்தால் உங்களைக்கூட இன்று ஆயிரம் பேர் காதலிப்பர். திரையில் உலாவும் ஆணழகர்களை ஆராதித்து அமரராகும் யுவன் யுவதிகளின் கதைகள் நாம் அறிவதே.

காதலின் சின்னம் தாஜ்மகால்தான் ஒப்புக்கொள்கிறேன். மரணத்திற்குப்பின்னும் மனைவியை நேசித்த ஒருவனின் அன்பின் அடையாளமது. நான் அதை மதிக்கிறேன்.  ஆனால், இன்றைய யுவ உலகிற்கு தாஜ்மகால் தேவையில்லை. தியேட்டர் இருட்டும் படகு மறைவும் போதும்.

ஏ யுவனே! யுவதியே! காதலுக்கு “தடா” சொல்! உன்னையும் உன் குறிக்கோள்களையும் செல்லரிக்கும் அந்த உடம்பு பசி உனக்கு வேண்டாம். வேண்டாவே வேண்டாம்!. வெளியே வா அந்த புதைக்குழியிலிருந்து. உனக்கு உன் துணையைத் தேறும் பருவம் வரவில்லை. உன்னைக் காதலிக்க வேண்டாம் என்றுச் சொல்லவில்லை.

காதல் செய், உன் மனைவியிடம்!. காதல் செய், உன் அன்புக்குரியவர்களிடம்!. உன்னையே நீ காதல் செய்!. உன் தொழில் மேல் காதல் செய்!

உன்னைத் தேடி ஒருநாள் உனக்கெனவே ஒருவள் வருவாள்! அதுவரை காதலுக்கு “தடா” சொல்!

கல்லூரி மலருக்காக எழுதிய ஆண்டு: 1996. 

பிறந்து வளர்ந்து நன்றாக படித்து நாளைய உலகை வளப்படுத்த உருவாகிய முப்பத்திரண்டு உயிர்களையும் அவர்களின் கனவுகளையும் பொசுக்கிய இரக்கமில்லா வன்முறையே உனக்கு இறப்பேயில்லையா?

வாழ்க்கை விட்டு கொடுத்தலில் சுவைக்கிறது.

அவரவர் விட்டு கொடுக்கும் அளவைப் பொறுத்து சுவையிருக்கிறது.

சுவையான வாழ்க்கையை முடியமளவு சமைப்போம்….